< Back
மாநில செய்திகள்
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: எப்.ஐ.ஆர். கசிந்தது எப்படி? - தேசிய தகவல் மையம் விளக்கம்
மாநில செய்திகள்

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: எப்.ஐ.ஆர். கசிந்தது எப்படி? - தேசிய தகவல் மையம் விளக்கம்

தினத்தந்தி
|
30 Dec 2024 5:27 PM IST

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான எப்.ஐ.ஆர். வெளியானது குறித்து தேசிய தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆர். கசிந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் எப்.ஐ.ஆர். நகல் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.

இந்தசூழலில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழில்நுட்பக் கோளாறால் எப்.ஐ.ஆர். நகல் கசிந்ததாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள், இந்த வழக்கில் எப்.ஐ.ஆர். எப்படி வெளியானது? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "முதல் தகவல் அறிக்கை காவல்துறை சார்பில் வெளியிடப்படவில்லை. இணையதளத்தில் தான் தவறுதலாக வெளியிடப்பட்டது. இருப்பினும் அது முடக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐ.பி.சி. (IPC)-ல் இருந்து பி.என்.எஸ் (BNS)குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் எப்.ஐ.ஆர் கசிந்ததாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய தகவல் மையம் பதில் அளித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த பதிலில் கூறியிருப்பதாவது:-

தேசிய தகவல் மையத்தில் எப்ஐஆர்-ஐ பார்வையிடும் வசதி குறிப்பிட்ட சில பிரிவுகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் போது தானாகவே பிளாக் செய்யப்படும். குறிப்பாக 64, 67,68,70, 79 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதியப்படும் எப்ஐஆர்-ஐ பார்க்கும் வசதி எஸ்சிஆர்பி கொடுத்த வழிகாட்டுதலின்படி முடக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு குறித்து பதியப்பட்ட, எப்ஐஆர்-ஐ ஐபிசி-யில் ( இண்டியன் பீனல் கோட் ) இருந்து பிஎன்எஸ் ( பாரதீய நியான சன்ஹிதா) குற்றவியல் சட்டத்திற்கு மாற்றும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்த தகவல் கசிந்து இருக்கலாம்.

பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் வழக்கில் பதியப்பட்ட எப்ஐஆர் எப்படி வெளியானது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். மேலும் முக்கிய வழக்குகள் மற்றும் பாலியல் வழக்குகளின் எப்ஐஆர்களை பார்வையிடுவதை முடக்குவது குறித்து மீண்டும், தொழில்நுட்ப ரீதியாக சரி செய்ய எஸ்சிஆர்பி குழுவுக்கு அறிவுறுத்தி உயுள்ளோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்