மாணவி பாலியல் பலாத்காரம்; கைதானவருக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை - அமைச்சர் துரைமுருகன்
|பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நபருக்கும், தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஞானசேகர் என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசை கண்டித்து சென்னையில் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் கைதான நபர் தி.மு.க. அமைச்சர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், இது குறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அமைச்சர்களுடன் யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியும் என்றும், கைதான நபர் தி.மு.க. நிர்வாகி என்று பரப்பப்படும் தகவல் தவறானது என்றும் விளக்கமளித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வேலூரில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், "கைதான நபர் பிரியாணி கடைக்காரர் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்த நபருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது" என்று தெரிவித்தார்.