மாணவி வன்கொடுமை விவகாரம்: அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் என்னென்ன..?
|மாணவர்கள் மாலை 6.30 மணிக்குள் விடுதிக்கு திரும்பும் வகையில் விதிகளில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை,
கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து குற்றவாளியை 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் (37) என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த 5 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசாணை வெளியிடவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த குழு மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி
* பல்கலைகழக செக்யூரிட்டிகள் அடையாள அட்டை கேட்டால் காண்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் மாலை 6.30 மணிக்குள் விடுதிக்கு திரும்பும் வகையில் விதிகளில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
* வெளியே செல்வது, தாமதமாக வருவதாக இருந்தால் ஹாஸ்டல் வார்டனிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
* தகவல் அளிக்காமல் விடுதிக்கு தாமதமாக வந்தால் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்படும்.
* பல்கலைகழக மாணவர்கள், அலுவலர்கள் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.