< Back
மாநில செய்திகள்
புயல் நிவாரண நிதியை 4 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

புயல் நிவாரண நிதியை 4 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
4 Dec 2024 5:11 PM IST

இரட்டை வேடம் போடுவதில் தி.மு.க.வுக்கு நிகர் தி.மு.க.தான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு, மருத்துவர்கள் பதவி உயர்வு, மின் கட்டணம் செலுத்தும் முறை, நீட் தேர்வு ரத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது என அனைத்துப் பிரச்சினைகளிலும் இரட்டை வேடம் போடுவதில் தி.மு.க.வுக்கு நிகர் தி.மு.க.தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அந்த வகையில், தற்போது பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் தி.மு.க. இரட்டை வேடத்தை போட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

பெஞ்சல் புயலை சரியாக தி.மு.க. அரசு எதிர்கொள்ளவில்லை என்பதும், தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக பல கிராமங்கள் இன்னமும் வெள்ளநீரில் தத்தளிக்கிறது என்பதும், பெரும்பாலான கிராமங்களுக்கு அரசு எவ்வித உதவியும் செய்யவில்லை என்பதும், பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை முகாம்களுக்கு கூட அழைத்துச் செல்ல முடியாத அரசாக தி.மு.க. அரசு விளங்குகிறது என்பதும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் தென் பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் பணம் 16 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கும்போது, ஊழலில் திளைத்துப் போயிருக்கிற அரசு தி.மு.க. அரசு என்பது மிகத் தெளிவாகிறது. இப்படி அரசுப் பணத்தை, மக்கள் பணத்தை வீணடிக்கின்ற தி.மு.க. அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிள்ளிக் கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

முதல்-அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே, உயிரிழந்தவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இது மட்டுமல்ல, நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்தான் தற்போது முதல்-அமைச்சர். அவர் சொன்னதையே அவரால் நிறைவேற்ற முடியவில்லை. பெஞ்சல் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். நெல் உள்ளிட்ட இறவை பாசன பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 17,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். இதேபோன்று, சேதமடைந்த குடிசைகளுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புகளுக்கு 37,500 ரூபாய் வழங்கப்படும் என்றும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புகளுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், கோழி உயிரிழப்புக்கு 100 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தி.மு.க. அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிவாரண உதவிகளுமே மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. இது "யானைப் பசிக்கு சோளப் பொறி" என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

2011-ம் ஆண்டு தானே புயலால் மக்கள் பாதிக்கப்பட்டபோது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1000 ரூபாய் நிவாரணத் தொகை, 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன. அப்பொழுதே பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. 2015-ம் ஆண்டு வெள்ளத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டபோது, குடிசை இழந்தவர்களுக்கு 10,000 ரூபாயையும், மற்றவர்களுக்கு 5,000 ரூபாயையும் வழங்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

பெஞ்சல் புயலால் தற்போது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மழையால் உயிரிழந்த மாடுகளுக்கு 40,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. தான் அளித்த வாக்குறுதியையும் கண்டு கொள்ளாமல், முந்தைய நேர்வுகளில், 10 ஆண்டுகள், 15 ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது வழங்கப்பட்ட நிவாரணங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அண்டை மாநிலமான புதுச்சேரியில் தற்போது என்ன வழங்கப்பட்டுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளாமல், தற்போதைய விலைவாசியை ஆராயாமல், மத்திய அரசின் வரையறையை மட்டுமே கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்டுள்ள மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2015-ம் ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, 03-12-2015 அன்று பாரதப் பிரதமரை நேரில் பார்வையிட வைத்து உடனடியாக 1,000 கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெற்றவர் ஜெயலலிதா என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது ஜெயலலிதாவின் ஆளுமைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதுபோன்ற நடவடிக்கையினைத்தான் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முதல்-அமைச்சர் மேற்கூறியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகளை நான்கு மடங்கு உயர்த்திக் கொடுத்திடவும், ஆங்காங்கே தேங்கியுள்ள நீரை விரைந்து அகற்றி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் பணிகளை மேற்கொள்ளவும், மத்திய அரசிடமிருந்து தேவையான நிதியை சாதுர்யமான முறையில் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்