விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்க நடவடிக்கை - தமிழக பாஜக வலியுறுத்தல்
|. மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என பாஜக மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத் தெரிவித்துள்ளார் .
சென்னை,
பாஜக மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெஞ்சல் புயல் தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. வாய்க்கால், ஏரி, குளம் எதுவும் தூர்வாரப்படாமல் மழை நீரை முறையாக சேமிக்க முடியாமல், கடல்நீரோடு கலக்கின்ற அவலநிலை இன்னும் தொடர்வது மாநில அரசின் செயலற்றத் தன்மையை காட்டுகிறது. அறுவடை செய்யும் நிலையில் இருந்த பயிர்களெல்லாம் நாசமானதை கண்ட விவசாயிகள் அழுத காட்சி மிகவும் வேதனை அளிக்கிறது.
விவசாயம், விவசாயிகளின் பாதுகாப்பை அரசு கவனத்தில் கொள்ளாதது நன்றாக தெரிகிறது. சொல்லொனா துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு முறையான இழப்பீட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கடந்த 10 நாட்களாக கடலூர், மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உடனடியாக வாழ்வாதார உதவிகளை அரசு செய்ய வேண்டும்.
மேலும், புயல் மழையால் உயிரிழந்தவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் தொகை போதுமானதாக இல்லை. அந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல், ஆடு, மாடுகள் இறப்பையும் முறையாக கணக்கிட்டு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக வீடு கட்டி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.