பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன்
|பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழக அரசு பருவமழைப் பெய்யும் இக்காலத்தில் மழையால் மக்களும், கால்நடைகளும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய வானிலை ஆய்வு மைய அறிவிப்புப்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு மாநிலத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது.
அதே போல காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை, புயல், வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புண்டு. இந்நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் பெய்த மழை, கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றையும் அதனால் மக்கள், கால்நடைகள், விளைநிலங்கள் அடைந்த பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த கால மழைக் கால அனுபவங்களை, சிரமங்களை, பாதிப்புகளை மனதில் வைத்து அதற்கேற்ப முன்னேற்பாடான நடவடிக்கைகளை இப்போது மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மழைக்காலங்களில் சென்னை மக்கள் மழை வெள்ள நீரை நினைத்து அச்சம் அடைவது இன்னும் நீடிக்கிறது. காரணம் கடந்த வாரம் ஒன்றிரண்டு நாட்கள் பெய்த மழையாலும் மக்கள் பாதிக்கப்பட்டு, போக்குவரத்திலும் சிரமம் ஏற்பட்டது. இச்சூழலில் தமிழக அரசு சென்னையில் வசிக்கின்ற மக்களுக்கு மழைக்காலப் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வடிகால் பணிகள், சுகாதாரப் பணிகள், சாலைப்பணிகள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து சரி செய்ய வேண்டும். மேலும் தாழ்வான மற்றும் கரையோரப் பகுதி மக்களின் பாதுகாப்பிலும் கவனம் தேவை.
கடந்த காலங்களில் தென் தமிழகப் பகுதிகளில் ஏற்பட்ட மழைக்காலப் பாதிப்பையும் கவனத்தில் கொண்டு கால்வாய்கள், வடிகால்கள், நீர்நிலைப் பகுதிகள் ஆகியவற்றில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் தேவை. தமிழக அரசு மழைப்பொழிவால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பல ஆயிரம் கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டும் இன்னும் மக்கள் மழை வெள்ளக் காலத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதை காணமுடிகிறது.
இயற்கைச் சீற்றத்தை தவிர்க்க முடியாத சூழலில் தமிழக அரசு சென்னை உட்பட மாநிலத்தில் மழை வெள்ளப் புயலால் பாதிக்கும் மாவட்ட மக்களைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான, துரிதமான, முறையான, சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.