< Back
மாநில செய்திகள்
மாநில அரசு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை தேவை - ஓ.பன்னீர்செல்வம்
மாநில செய்திகள்

மாநில அரசு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை தேவை - ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
18 Feb 2025 12:41 PM IST

ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டு அட்டை கிடைக்க நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கை எண் 308-ல், "மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 80-வயது நிறைந்தவுடன் 20 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி 70-வயது நிறையும் பொழுது 10 சதவிகிதமும், 80-வயது நிறையும் பொழுது மேலும் 10 சதவிகிதமும் ஓய்வூதியம் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டு இருக்கிறது. தி.மு.க. அரசால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்பது வேறு விஷயம்.

ஆனால், 80-வயது நிறைவுற்ற ஓய்வூதியதாரர்களுக்கே 20 விழுக்காடு உயர்த்தி வழங்குவதில் மாதக் கணக்கில் தாமதம் ஏற்படும் அவல நிலை நிலவுகிறது. இதனையும், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது "கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டுவேன்" என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

80-வயது நிறைந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு வழங்க வேண்டிய முழு ஓய்வூதியத்தையும், 80-வயது முடிந்த ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய 20 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியத்தையும் வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்

முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, 15 ஆண்டுகள் முடிந்த அடுத்த மாதத்திலிருந்து ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் முழு ஓய்வூதியம் தானாக சென்றடையும் வகையிலும், 80 வயது நிறைந்தவர்களுக்கு 20 விழுக்காடு ஓய்வூதியம் தானாக சென்றடையும் வண்ணமும், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டு அட்டை கிடைக்கும் வகையிலும் உடனடி நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்