வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்
|வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், தங்களுடைய பெயர் உள்ளதா என்பதை வாக்காளர்கள் தேர்தல் துறையின் இணைய தளம் (www.elections.tn.gov.in) வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அதில், திருத்தம் ஏதாவது மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தால், தமிழகம் முழுவதும் இம்மாதம் நான்கு நாட்கள் நடக்கும் சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதன்படி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 29.10.2024 முதல் 06.01.2025 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின், ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால், 16.11.2023, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/ நீக்கல்/ திருத்தல்/ இடமாற்றம்/ ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.
பல்வேறு வகையான படிவங்கள்:
படிவம் 6- புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பப் படிவம்
படிவம் 6 A- வெளிநாடு வாழ் வாக்காளர் ஒருவர் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்பம்
படிவம் 6B- வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்திற்காக ஆதார் எண் உண்மையென சான்றுரைத்தல்
படிவம் 7- நபரின் பெயரை சேர்க்க ஆட்சேபணைக்கான வாக்காளர் விண்ணப்பப் படிவம்/ வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள பெயரை நீக்கக் கோருவதற்கான விண்ணப்பம்
படிவம் 8- குடியிருப்பை ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தற்போது வசிக்கும் தொகுதிகுள்ளேயே மாற்றினாலோ / நடப்பு வாக்காளர் பட்டியலிலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கான/ மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான/ மாற்றுத் திறனாளிகளை குறிப்பதற்கான விண்ணப்பப் படிவம்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.