மாநாட்டில் விஜய் ஆக்ரோஷமாக பேசியது ஆச்சரியங்களை தந்திருக்கிறது - நடிகை ராதிகா
|பாஜகவை தாக்கி பேச விஜய் கொஞ்சம் யோசிப்பார் என்று நினைக்கிறேன் என்று நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
கோவை,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. 5 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் கூடியதைக் கண்டு, கட்சியின் தலைவர் விஜய் மேடையிலேயே கண் கலங்கினார்.
திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் 45 நிமிடங்கள் பேசிய விஜய், மக்கள் தனிப்பெரும்பான்மையுடன் 100 சதவீதம் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்றாலும், நம்மை நம்பி கூட்டணிக்கு வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். விஜய்யின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் விஜயின் பேச்சு குறித்து தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார் நடிகையும் அரசியல் தலைவருமான ராதிகா சரத்குமார். பாஜக சார்பில் கோவையில் நடைபெற்ற விழா ஒன்றில் வானதி சீனிவாசனோடு பங்கேற்ற நடிகை மற்றும் அரசியல் தலைவர் ராதிகா சரத்குமார் தளபதி விஜயின் மாநாடு குறித்து சில விஷயங்களை கூறி உள்ளார்.
விஜய் தனியாக கட்சியை தொடங்கியிருப்பதற்கு என்னுடைய மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருமே அரசியலுக்கு மக்களுக்கு நன்மை செய்யத் தான் வருகிறார்கள். அதை அவர்களுடைய கொள்கைகளுக்கு ஏற்ப செய்வது நல்லது தான். தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நட்சத்திரமாக திகழ்ந்து வரும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவு செய்தது மிகச் சிறந்த முடிவு தான்.
சிறுவயதில் இருந்து எனக்கு விஜய் தெரியும், அவருடைய தந்தையின் இயக்கத்தில் நான் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். ஆகையால் இன்று அவர் இந்த வயதில் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் திமுகவை நேரடியாகவும், அதிமுகவைப் பற்றி எதுவும் பேசாமலும், பாஜகவை மறைமுகமாகவும் தாக்கி விஜய் பேசியது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு..
"அவர் யோசித்து தான் அனைத்து விஷயங்களையும் பேசுவார். அப்படித் தான் திமுகவை நேரடியாக எதிர்த்து பேசி இருக்கிறார். ஆனால் பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு முன் கட்டாயம் அவர் யோசித்து தான் பேசுவார். அதிமுகவை பற்றி அவர் ஏன் பேசவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. அரசியலை அவர் வேறு விதமாகத்தான் பார்த்து வருகிறார். தெறி படத்தில் அவரோடு நான் நடித்திருக்கிறேன், அவர் பொதுவெளியில் பெருசாக பேசக்கூட மாட்டார். ஆனால் நேற்று நடந்த அந்த மாநாட்டு மேடையில் அவர் அவ்வளவு ஆக்ரோஷமாக பேசியது எனக்கு ஆச்சரியங்களை தந்திருக்கிறது. அடுத்து தனது கட்சிக்காரர்களை அடையாளம் காட்டி என்ன செய்யப்போகிறார் என்பதை பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.