கோவையில் யானை வழித்தடத்தில் மண் எடுப்பு - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
|யானை வழித்தடத்தில் மண் எடுக்கப்படுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கோவையில் வனப்பகுதியில் யானை வழித்தடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோவை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோவை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவர் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, யானை வழித்தடத்தில் மண் எடுப்பதை தடுக்க இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர்.
மேலும், 10 மீட்டர் ஆழத்திற்கு பெருமளவில் மண் எடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை எப்படி ஈடுகட்ட போகிறீர்கள்? சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என சரமாரியாக கேள்வி எழுப்பிய நிதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக கனிம வளத்துறை ஆணையர், கோவை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அதிகாரி ஆகியோர் டிசம்பர் 6-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.