சமூக வலைதள பழக்கம்... 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்
|8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையத்தை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியை தேடி வந்தனர். இதற்கிடையே மாயமான மாணவி அவரது தாயாரின் செல்போனை எடுத்து சென்றதால், அந்த செல்போன் மூலம் மாணவியின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு சென்ற போலீசார் அவரை மீட்டனர்.
மாணவியிடம் நடத்திய விசாரணையில், சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக வாலிபர்கள் சிலர் திருவண்ணாமலைக்கு வரவழைத்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை போக்சோ வழக்காக மாற்றம் செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாயமான மாணவியை திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ், ஆகாஷ், இளங்கோவன், சஞ்சய், செல்வகுமரன் உள்பட 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் விக்னேஷ் உள்ளிட்ட 5 பேரையும் நேற்று கைது செய்தனர். மேலும் ஒரு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.