< Back
மாநில செய்திகள்
பெரியார் குறித்து அவதூறு கருத்து: எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

பெரியார் குறித்து அவதூறு கருத்து: எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
28 Dec 2024 4:41 AM IST

எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்திருந்தது.

சென்னை,

பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. இன்று திரிபுராவில், நாளை தமிழகத்தில் ஈ.வே.ராமசாமி சிலை" என்று கூறியிருந்தார். இதுகுறித்து, எச்.ராஜாவுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல, தி.மு.க., எம்.பி., கனிமொழி குறித்து அவதூறான கருத்தை சமூக வலைதளத்தில் எச்.ராஜா பதிவிட்டார். இதுகுறித்தும் ஈரோடு போலீசில் மற்றொரு புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் எச்.ராஜா மீது 2-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த 2 வழக்குகளையும் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு விசாரித்தது.

பின்னர், எச்.ராஜாவுக்கு தலா 6 மாத சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எச்.ராஜா மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி விக்டோரியா கவுரி நேற்று விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் அனந்த பத்மநாபன், வக்கீல் ராமமூர்த்தி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதி, "இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு பிறப்பிக்கும் வரை, எச்.ராஜாவுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்கிறேன். விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்