< Back
மாநில செய்திகள்
இடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன்
மாநில செய்திகள்

இடைத்தேர்தலை புறக்கணிப்பது அ.தி.மு.க.வின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன்

தினத்தந்தி
|
12 Jan 2025 5:26 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக பரிமாணம் பெற்றுள்ளது. கடந்த கால் நூற்றாண்டுகளாக தேர்தல் களத்தில் இந்த இயக்கம் கடுமையான நெருக்கடியை கடந்து, இந்த மகத்தான வெற்றியை எட்டி உள்ளது. இந்த அதிகாரத்தை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றி வாய்ப்பதற்கு உற்ற துணையாக இருந்த தி.மு.க. தலைமையிலான தோழமை கட்சிகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக முதல்-அமைச்சரை வி.சி.க. சார்பில் நேரில் சந்தித்து நன்றியை பகிர்ந்தோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றுவோம் என்று பகிர்ந்து கொண்டோம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது அவர்களின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. வெற்றியோ, தோல்வியோ அதை எதிர்கொள்வதுதான் அ.தி.மு.க.வின் சிறப்பு. விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்தார்கள். இப்போது ஈரோடு கிழக்கு தேர்தலையும் புறக்கணித்துள்ளார்கள். இது மறைமுகமாக பா.ஜ.க.வின் நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பதாக அமையும்.

அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி நாங்களே இரண்டாவது பெரிய கட்சி என்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பா.ஜ.க. முன்னெடுக்கும். இது எந்த வகையிலும் அ.தி.மு.க.வுக்கு பலன் தராது. அ.தி.மு.க. மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பு கடுமையாக பாதிக்கப்படும். இது அ.தி.மு.க.வின் சரிவுக்கான புள்ளியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்