< Back
மாநில செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகம் சாமி தரிசனம்
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகம் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
17 Nov 2024 11:51 AM IST

திருத்தணி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

சென்னை,

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 5-ம் படை வீடாக திருத்தணி முருகன் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். கிருத்திகை, விடுமுறை தினம் மற்றும் விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

அந்தவகையில், கார்த்திகை முதல்நாள் மற்றும் கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பொது வழியில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கிருத்திகையையொட்டி சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகம் பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருத்தணியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி வளாகத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார். கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் சுரேஷ்பாபு ஆகியோர் அவரை வரவேற்றனர்.

பின்னர் கோவிலுக்குள் சென்ற சிங்கப்பூர் மந்திரி ஆபத்சகாய விநாயகர், சண்முகர், மூலவர், வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூ மாலை மற்றும் விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, காரில் கல்லூரிக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்