அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு: ரெயில்கள் தாமதம்; பயணிகள் அவதி
|நீண்ட நேரம் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால், ரெயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 3-வது மற்றும் 4-வது நடைமேடையில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் 2 நடைமேடைகளில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் அரக்கோணம் வழியே சென்னை செல்லக் கூடிய ரெயில்கள் ரெயில் நிலையத்திலேயே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நீண்ட நேரமாக ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் சென்னைக்கு நாள்தோறும் பணிக்கு செல்லும் பயணிகள் அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை வழியாக சொந்த ஊர்களுக்கு செல்ல பயணத் திட்டமிட்டுள்ள பயணிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து, சிக்னல் கோளாறை ரெயில்வே ஊழியர்கள் சரிசெய்த பின், காலை 6 மணியளவில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.