மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு - டி.டி.வி.தினகரன் இரங்கல்
|மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு டி.டி.வி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின்சாரம் தாக்கி பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் (வயது 36) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கொடிகம்பம் மின்கம்பியில் பட்டதில் உதவி ஆய்வாளர் சரவணன் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நிகழ்வில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் சரவணன், மின்விபத்தில் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.
காவல் உதவி ஆய்வாளர் சரவணனை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.