< Back
மாநில செய்திகள்
குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா? - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கேள்வி
மாநில செய்திகள்

'குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா?' - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கேள்வி

தினத்தந்தி
|
1 Nov 2024 4:36 PM IST

குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா? என நீதிபதி ஸ்ரீராம் கேள்வி எழுப்பினார்.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த சங்கர் என்பவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, விவசாய பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கப்படும் நிலையில், தற்போது வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆதனூர் கண்மாய்க்கு நீர் நிரப்பி விவசாயத்தை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில் வைகை ஆற்றின் கரையோரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அங்கு குடியிருப்போர் வைகை ஆற்றில் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி ஸ்ரீராம், "ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் இருப்பதை போல், அடிப்படை கடமைகளும் இருக்கின்றன. வைகை ஆற்றில் வாகனங்களை கழுவுகிறார்கள். இதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா?

நகர் பகுதிகளில் வைகை ஆற்றில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். வைகை ஆற்றில் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார். மேலும் இந்த மனு தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்