
அரசுப் பேருந்துகளின் குறிப்பேடு பதிவை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவதா?: டி.டி.வி. தினகரன்

தாய்மொழி தமிழை புறக்கணிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னைப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அரசுப் பேருந்துகளின் வழித்தட எண், புறப்படும் நேரம், பழுதுகள் மற்றும் குறைபாடுகள் உள்ளிட்டவற்றை குறிப்பிடும் வாகனக் குறிப்பேடு படிவம் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பல ஆண்டுகளாக தமிழில் இருந்த வாகனக் குறிப்பேடு எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டிருப்பதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வித்தகுதியில் பணிக்குச் சேர்ந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் வாகனப் பழுது மற்றும் குறைபாடு விவரங்களை எழுதுவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்திக்கு எதிராக மேலும் ஒரு மொழிப்போரை சந்திக்கக் தயாராக இருப்பதாக வீரவசனம் பேசும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலேயே தாய்மொழி தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
அரசுப்போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயன்படுத்தப்படும் வாகனக் குறிப்பேடுகளை கூட தமிழில் வழங்க முடியாத திமுக அரசும் அதன் முதல்-அமைச்சரும், இந்திக்கு எதிராக தமிழ் காக்கும் அறப்போரில் பங்கேற்க பொதுமக்களை அழைப்பது முழுக்க முழுக்க ஏமாற்றும் செயலாகும்.
எனவே, ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்றி அரசுப்பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் வழங்கப்படும் வாகன குறிப்பேடு படிவத்தை தமிழில் மட்டுமே வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.