அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்க கோரிய செந்தில்பாலாஜி மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்டு
|அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்கக் கோரிய செந்தில்பாலாஜி மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை,
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த பிரதான வழக்குகளின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதையடுத்து தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதான வழக்குகள் மீதான விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் எனக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், மறு ஆய்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதையேற்றுக்கொண்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.