விழுப்புரத்தில் புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை விரைந்து சீரமைக்க செந்தில் பாலாஜி உத்தரவு
|விழுப்புரத்தில் புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை விரைந்து சீரமைக்க அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
விழுப்புரம் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் கம்பங்களை சரிசெய்து சீரான மின் விநியோகம் விரைவாக வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் க.நந்தகோபால், தலைமைப் பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின்பு விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட விழுப்புரம் - தும்பூர், செஞ்சி - சிறுகடம்பூர் சாவடி தெரு, சிறுகடம்பூர் புனித மிக்செல்பள்ளி, திண்டிவனம் கிடங்கல், மரக்காணம், ஆரோவ், திருச்சிற்றம்பலம் ஆகிய இடங்களில் புயல் காற்றினால் சேதமடைந்த மின் கம்பங்கள், மின் கம்பிகளை சீர்செய்யும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடித்து பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இரவு பகலாக சிறப்பாக பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் மின் களப்பணியாளர்களை சந்தித்து வெகுவாக பாராட்டினார்.
பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- பெஞ்சல் புயலால் பாதிப்பு அடையாத பிற மாவட்டங்களில் இருந்து 900 மின் களப்பணியாளர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் வரவழைத்து போர்க்கால அடிப்படையில் மின்கம்பங்கள், மின்கம்பிகள் மற்றும் மின்மாற்றிகளை சரிசெய்து சீரான மின்சாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 7,56,000 மின் இணைப்புகள் உள்ளன. அதில் 24,000 வீடுகளுக்கு மழையின் காரணமாக மின் இணைப்பு நிறுத்தப்பட்டது. இன்று இரவுக்குள் மழை நீர் வடிய வடிய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.