கோவையில் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார் செந்தில் பாலாஜி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|திமுகவின் செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது, இதுதான் பலரும் நம்மை விமர்சிக்க காரணம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவை,
அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சரியாக சென்றடைகிறதா? என்பதை நேரில் சென்று கேட்கும் வகையில், 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து உள்ளார்.
இந்த திட்டத்தில் முதல்-அமைச்சர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்ட வாரியாக சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் ஆய்வு செய்வார். அதன்படி கோவையில் முதல் முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை நேற்று தொடங்கினார். 2-வது நாளாக கோவையில் தங்கி கள ஆய்வு செய்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை அனுப்பர்பாளையத்தில் கலைஞர் நூலகம், அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
கோவை மாநகர மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உள்ளேன். 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பில் நூலகம் அமைய உள்ளது. மாணவர்களை சந்திக்கும் போது புதிய உத்வேகம் ஏற்படுகிறது. மதுரை நூலகத்தை பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். கோவை நூலகம் 2026ஆம் ஆண்டு திறக்கப்படும். கோவை நூலகம் கம்பீரமாக மிகச் சிறப்பாக அமையும்.
தங்க நகை வியாபாரிகள் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். கோவையில் கலைஞர் நூலகம், அறிவியல் மையம் 2026-ல் ஜனவரியில் திறக்கப்படும். கோவையில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்து இருக்கிறார். சிறப்பாக செயல்பட்ட செந்தில்பாலாஜிக்கு இடையில் சில தடைகளை ஏற்படுத்தினர். ஆனால் தடைகளை உடைத்து மீண்டும் வந்திருக்கிறார். தொடர்ந்து கோவைக்காக சிறப்பாக செயல்படுவார் அமைச்சர் செந்தில் பாலாஜி அது உறுதி.
கடந்த சட்டமன்றத் தேர்தல், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலைவிட திமுகவின் செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது. இதுதான் பலரும் நம்மை விமர்சிக்க காரணம். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்துகொண்டுதான் இருப்போம்.
வட மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒப்பிட்டு பாருங்கள் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற நிலையை மாற்றி தெற்கை நாங்கள் வளர்த்திருக்கிறோம். தமிழ்நாடு பல்வேறு நிலைகளில் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அறிவியல் மையம் அமைகிறது.