சென்னையில் கஞ்சா விற்பனை; சூடான் நாட்டைச் சேர்ந்த இருவர் கைது
|கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த சூடான் நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை பல்லாவரம் மற்றும் தாம்பரம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 28 இடங்களுக்கும் மேல் நடத்தப்பட்ட சோதனையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, குட்கா மற்றும் இதர போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சூடான் நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அதில், முகமது அல்ஸ்மானே என்பவர் விசா காலாவதி ஆகிய பின்னும் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருப்பது தெரிய வந்தது. மேலும், சேலையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனை மேற்கொண்டதில், நான்கு கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இதில் தொடர்புடைய மற்ற கஞ்சா வியாபாரிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.