< Back
மாநில செய்திகள்
வெளிமுகமை மூலம் அரசுப் பொறியாளர்கள் தேர்வு: இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல் - ஓ.பன்னீர்செல்வம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

வெளிமுகமை மூலம் அரசுப் பொறியாளர்கள் தேர்வு: இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல் - ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
29 Dec 2024 2:16 AM IST

வெளிமுகமை மூலம் அரசுப் பொறியாளர்களை தேர்வு செய்வது இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உள்ளாட்சி அமைப்புகளில், பொதுத்துறை நிறுவனங்களில், அரசு துறைகளில், பள்ளிகளில், கல்லூரிகளில், மருத்துவமனைகளில் என அனைத்திலும் ஒப்பந்த முறையிலும், தொகுப்பூதியத்திலும், வெளிமுகமை மூலமும் கீழ்நிலையில் உள்ள காலிப் பணியிடங்களையும், ஆசிரியர்கள், செவிலியர்கள், கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களையும் நிரப்பி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள தி.மு.க. அரசு, ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்தி வரும் தி.மு.க. அரசு, தற்போது அரசுப் பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள் பணியிடங்களையும் வெளிமுகமை மூலம் நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இது இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல்.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில், குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டித் தருதல், ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளை புதுப்பித்தல், சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடித்து புதிதாக அடுக்குமாடிக் கட்டடங்களை கட்டித் தருதல் போன்ற பணிகளை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றைக் கண்காணிக்கக்கூடிய பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள் முறையான காலமுறை விகிதத்தில் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவது வழக்கம். இந்த நடைமுறையை மாற்றி, பொறியாளர் மற்றும் கட்டட வடிவமைப்பாளர் பணியிடங்களையும் வெளிமுகமை மூலம் நிரப்பும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு இறங்கியுள்ளது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் சமூகநீதிக்கு எதிரானது. இதன்மூலம் இடஒதுக்கீடு பின்பற்றப்படாது என்பதும், இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு எட்டாக்கனி என்பதும் தெள்ளத் தெளிவாகியுள்ளது. இந்த நடவடிக்கை, தரம் குறைந்த அடுக்குமாடிக் கட்டடங்களை கட்டுமான நிறுவனங்கள் கட்டுவதற்கு வழிவகுப்பதோடு, முறைகேடுகளுக்கு இடமளிக்கும். இந்த சூழ்நிலையில், வெளிமுகமை மூலம் பணியமர்த்தப்படும் பொறியாளர்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க இயலாது. ஏனென்றால், அவர்களுக்கு எவ்வித பொறுப்புடமையும் இல்லை என்பதே யதார்த்தம்.

எனவே, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கான பொறியாளர்கள் மற்றும் கட்டட வடிவமைப்பாளர்கள் பணியிடங்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முறையான காலமுறை விகிதத்தில் அமர்த்தவும், வெளிமுகமை மூலம் பொறியாளர்கள் மற்றும் கட்டட வடிவமைப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுவதை உடனடியாக ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்