சீமான் போலி அரசியல்வாதி - அமைச்சர் சிவசங்கர் தாக்கு
|வெள்ளத்தடுப்பு பணிகளை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று குறை கூறுகிறார்கள் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் செந்துறையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்கள் மொபைல் ஆப் மூலம் நாடு முழுவதும் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களால் தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக சமூக அலுவலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதனை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத்தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தியது.
எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று குறை கூறுகிறார்கள் என்றார். தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து சீமான் தெரிவித்த கருத்து குறித்து நிருபர்கள் கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மனோன்மணியம் சுந்தரனார் காலத்தில் பாடப்பட்டு தமிழக அரசு அதனை ஏற்று அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த பண்பாடு தெரிந்தவர்கள், அதன் அருமை, பெருமை தெரிந்தவர்களுக்கு தான் புரியும். அவரை (சீமான்) போன்றவர்கள் வெறும் போலி அரசியல்வாதிகள். எந்த நேரத்தில் எதையாவது ஒன்றை பரபரப்பு செய்திகளுக்காக பேசுவார்கள். எனவே அவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.