< Back
மாநில செய்திகள்
சுட்டெரிக்கும் வெயில்: போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி. ஹெல்மெட்
மாநில செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்: போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி. ஹெல்மெட்

தினத்தந்தி
|
4 March 2025 10:57 AM IST

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க, போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி. பொருத்திய ஹெல்மெட் வழங்கப்பட்டது.

சென்னை,

பொதுவாக கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில்தான் வெயில் சுட்டெரிக்கும். அதுவும் அக்னி நட்சத்திர வெயில் வெயிலின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும். ஆனால், இப்போது புவி வெப்பமயமாதலுக்கு பிறகு பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிடுகிறது.

இந்த வெயில் யாருக்கு கஷ்டமாக இருக்கிறதோ இல்லையோ, சென்னை போன்ற பெருநகரங்களில் சாலையில் நின்று கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாரை படாதபாடு படுத்திவிடும். அதனால்தான், பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையில் நின்றுகொண்டு வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாருக்கு கோடை காலத்தில் பித் வகை தொப்பி வழங்கப்படும். இது வெயிலில் இருந்து ஓரளவு அவர்களை காக்கும் என்றாலும் காற்றோட்டமான நிலையை தராது.

இந்த நிலையில், சென்னை அருகே புதிதாக உதயமான ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாருக்கு ஏ.சி.வைத்த ஹெல்மெட்டை கமிஷனர் சங்கர் வழங்கி அசத்தியுள்ளார். இந்த ஹெல்மெட் இயற்கை நாரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரி மூலம் ஏ.சி.மெஷினை இயங்கச் செய்து குளுகுளு காற்று வழங்கப்படுகிறது. இது போக்குவரத்து போலீசாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்