< Back
மாநில செய்திகள்
நெல்லையில் இன்று பள்ளிகள் திறப்பு: முக்கிய அறிவுறுத்தல் வழங்கிய மாவட்ட நிர்வாகம்
மாநில செய்திகள்

நெல்லையில் இன்று பள்ளிகள் திறப்பு: முக்கிய அறிவுறுத்தல் வழங்கிய மாவட்ட நிர்வாகம்

தினத்தந்தி
|
16 Dec 2024 7:21 AM IST

நெல்லையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்துடன், பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. மழை, வெள்ளத்தால் தாமிரபரணி கரையோர பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும், சில பள்ளிகளிலும் மழை நீர் சூழந்தது.

தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீரும் வடிய தொடங்கியுள்ளது. நெல்லையில் நேற்று பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த சூழலில், மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தாமிரபரணி கரையோர கிராமங்களில் பள்ளிகளை திறப்பதற்கு முன்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் தொடர்புடைய உள்ளாட்சியைச் சார்ந்த அலுவலர்கள் முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பினை உறுதி செய்த பின்பே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் நீர் தேங்கி இருந்தாலோ வேறு பாதிப்புகள் இருந்தாலோ உடனடியாக முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்து பள்ளிக்கு விடுமுறை அளிக்க தொடர்புடைய தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்