< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: உதவி ஜெயிலரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்
மாநில செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: உதவி ஜெயிலரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்

தினத்தந்தி
|
22 Dec 2024 8:46 AM IST

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மதுரை,

மதுரை மத்திய சிறையில் கைதியாக இருந்து விடுதலையான ஒருவர், மதுரை பைபாஸ் சாலை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த ஓட்டலுக்கு சில தினங்களுக்கு முன்பு, மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வரும் பாலகுருசாமி என்பவர் சென்றார். அப்போது, அங்கிருந்த கைதியின் மகளிடம் பேசி உள்ளார்.

மேலும் அங்கிருந்த கைதியின் பேத்தியான 14 வயது மாணவியிடம் பேசி, தனது செல்போன் எண்ணை கொடுத்து, பள்ளி படிப்புக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுமாறு கூறினாராம். இதனை தொடர்ந்து அந்த மாணவியிடம் அவ்வப்போது செல்போனில் பேசி நலம் விசாரித்துள்ளார்.

இதற்கிடையே, உதவி ஜெயிலர் பாலகுருசாமி, அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அந்த மாணவியை தனியாக அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி, தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, தனது தாத்தா, பாட்டி, சித்தி ஆகியோருடன் அந்த மாணவி, உதவி ஜெயிலர் அழைத்த இடத்திற்கு சென்றார். இதில் சித்தி, 30 வயது இளம்பெண் ஆவார்.

அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த பாலகுருசாமி தன்னுடன் வாகனத்தில் வருமாறு மாணவியை அழைத்தாராம். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். உடனே அங்கு ஓடி வந்த, மாணவியின் சித்தி, தன் அக்காள் மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறி உதவி ஜெயிலர் பாலகுருசாமியை பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வைத்து சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக, உதவி ஜெயிலர் பாலகுருசாமி மற்றும் அவரை தாக்கிய இளம்பெண் உள்ளிட்டோரிடம் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பின்னர், வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே சிறை உதவி ஜெயிலர் பால குருசாமியை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்