ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய மருத்துவ வசதி தேவை- சீமான்
|ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் தொழிலாளர்களைத் துன்புறச்செய்யும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தின் கீழ் இயங்கும் கீரிப்பாறை தொழிற்கூடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் தொழிலாளர்களைத் துன்புறச்செய்யும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. தங்களது அடிப்படை உரிமைகளுக்காக கடந்த 25.11.2024 முதல் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் இரப்பர் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு இன்றுவரை செவி சாய்க்காமல் இருப்பது கொடுங்கோன்மையாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21வது பிரிவின் கீழ் உடல்நலம் பேணும் உரிமை என்பது அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படையான வாழ்க்கை உரிமையின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று உச்சநீதிமன்றமே தெளிவுப்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான அமைப்பும் (The International Convenant on Economic Social and Cultural Rights (ICESCR) தனது அறிக்கையில் உடல்நலன் பேணும் உரிமையை அங்கீகரிக்கிறது. அவ்வாறான நிலையில் உயர்நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி கீரிப்பாறை தொழிற்கூடத்தில் பணிபுரியும் பணியாளர்கள், தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் (ESIC) உறுப்பினராகச் சேர்வற்கு தமிழ்நாடு அரசு தடையாக இருப்பதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு சார்ந்த தொழிற்கூடத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்குப் போதிய மருத்துவ வசதி செய்யாமல் தொழிலாளர்களை தமிழ்நாடு அரசே துன்புறுத்துவது என்பது எவ்வகையில் நியாயமாகும்? இதுதான் சமூகநீதி காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனையா?
ஆகவே, தமிழ்நாடு அரசினது வனத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு ரப்பர் கழக தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி, கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை மற்றும் சித்தார் பகுதிகளில், தோட்டத் தொழிலாளர் சட்ட விதிகளின்படி அமைக்கப்பட்டு இயங்கி வரும் தோட்ட மருத்துவமனையைச் சீரமைத்து, வாரத்தின் அனைத்து நாட்களிலும் மருத்துவர் மற்றும் செவிலியர் சேவை கிடைத்திடும் வகையில் உயர்தர மருத்துவ வசதியை தொழிலாளர்களுக்குச் செய்துதர வேண்டுமெனவும், அவர்கள் அனைவரையும் உடனடியாக தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் (ESIC) உறுப்பினராகச் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.