< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில் ரூ.810 கோடியில் திட்டப்பணிகள்: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் ரூ.810 கோடியில் திட்டப்பணிகள்: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தினத்தந்தி
|
22 Oct 2024 2:53 AM IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட செலம்பகவுண்டர் பூங்காவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை நிறுவப்பட்டு உள்ளது. இதேபோல் மாநகராட்சியில் புதிதாக ரூ.19 கோடியே 50 லட்சம் செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இவற்றின் திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திறந்து வைக்கிறார்.

மேலும் ரூ.90 கோடியில் நவீன பால்பண்ணை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேச உள்ளார். இதையொட்டி நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள பொம்மைகுட்டைமேடு பகுதியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை 11.30 மணிக்கு சேலம் விமான நிலையத்துக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலின், மதியம் 12 மணிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் சுற்றுலா மாளிகை செல்லும் அவர் அங்கு மதிய உணவு அருந்துகிறார். பிற்பகல் 3 மணிக்கு விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தரும் அவர், கண்காட்சியை பார்வையிடுகிறார்.

தொடர்ந்து பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.810 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் சுமார் 16 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் குறித்த குறும்படம் ஒளிபரப்பப்படுகிறது. விழா முடிந்ததும் கார் மூலம் திருச்சி செல்லும் அவர், அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் திரும்புகிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்