விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
|தஞ்சையில் நடந்த சாலை விபத்தில் குற்றப்புலனாய்வுத் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
தஞ்சை,
தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு சாலை விபத்தில் காவல் துறை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
"தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்த செந்தில்குமார் (வயது 49) என்பவர் இன்று (19.10.2024) பிற்பகல் 3.15 மணியளவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவிட்டு திரும்பும் வழியில் இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை சென்றபோது, தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் கறம்பியம் அருகில் எதிரில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.