விபத்தில் உயிரிழந்த ஹவில்தார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
|சாலை விபத்தில் உயிரிழந்த ஹவில்தார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த உள்வட்டப் பாதுகாப்பு பிரிவு ஹவில்தாரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
உள்வட்டப் பாதுகாப்புப் பிரிவில் ஹவில்தாராகப் பணிபுரிந்து வந்த L.செந்தில்வேல் 27-ந்தேதி அதிகாலை பணியின் நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் சென்று கொண்டிருந்தபோது ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பின்னாவரம் கிராமம், ஆட்டுப்பாக்கம் ரெயில்வே கேட் எதிரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உள்வட்டப் பாதுகாப்புப் பிரிவு ஹவில்தார் செந்தில்வேலின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். செந்தில்வேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.