ஈரோட்டில் ரூ.1,369 கோடியில் வளர்ச்சி பணிகள்: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
|ஈரோட்டில் ரூ.1,369 கோடியில் வளர்ச்சி பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தின் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப்பணிகள் தொடக்கவிழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு சோலாரில் உள்ள புதிய பஸ் நிலைய வளாகத்தில் கோலாகலமாக நடக்கிறது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 50 ஆயிரத்து 88 பேருக்கு ரூ.284 கோடியே 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் ஈரோடு மாவட்டத்தில் ரூ.951 கோடியே 20 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 559 திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.133 கோடியே 66 லட்சம் மதிப்பில் 222 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
மொத்தம் ரூ.1,369 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். விழாவில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், மாநகராட்சி மேயர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தி.மு.க. கட்சி கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. சோலார் பகுதியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மேலும் 7 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 480 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.