< Back
மாநில செய்திகள்
மீண்டும் ஏறுமுகம்: தங்கம் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்கியது
மாநில செய்திகள்

மீண்டும் ஏறுமுகம்: தங்கம் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்கியது

தினத்தந்தி
|
20 Nov 2024 10:02 AM IST

தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி செல்லத் தொடங்கி உள்ளது. இதன்படி 3-வது நாளாக விலை உயர்ந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) இறுதி வரை உயர்ந்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதன் விலை குறைந்து கொண்டே வந்தது. இதன்படி கடந்த 1-ந்தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 385-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது. அதன் பின்னர் விலை குறைந்து கொண்டே வந்து, கடந்த 17-ந் தேதி ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 935-க்கும், ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இடைபட்ட 17 நாட்களில் பவுனுக்கு ரூ.3 ஆயிரத்து 600 வரை குறைந்திருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு பிறகு, போர் பதற்றம் சற்று குறைவதாக தெரிந்த நிலையில், தங்கம் விலை குறைந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் விலை ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் அதிகரித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை உயர்ந்து இருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 995-க்கும், ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 65-க்கும், ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை

இந்நிலையில் 3-வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 115-க்கும், ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்து 920-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,440 அதிகரித்துள்ளது. இதன் மூலம் மீண்டும் ஒரு பவுன் தங்கம் ரூ.57 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தவரையில், கடந்த 15-ந்தேதிக்கு பிறகு விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. நேற்று முன்தினம் வரை ஒரு கிராம் ரூ.99-க்கும், ஒரு கிலோ ரூ.99 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. தங்கத்தை போல், வெள்ளியும் நேற்று கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்