
தெலுங்கானாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களை தியேட்டருக்கு அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள் - கோர்ட்டு உத்தரவு

16 வயதுக்குட்பட்ட சிறார்களை தியேட்டருக்கு அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத்,
தியேட்டர்களில் சிறப்பு காட்சி திரையிடுதல் மற்றும் டிக்கெட் கட்டண உயர்வு தொடர்பாக தெலுங்கானா மாநில ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதி விஜய்சென் ரெட்டி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 16 வயதுக்குட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன்பும், இரவு 11 மணிக்குப் பிறகும் தியேட்டருக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்க கூடாது என்றும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பது குழந்தைகளுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.