எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி விவாதத்திற்கு தயார் - உதயநிதி ஸ்டாலின்
|தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தமிழகத்தில் உருவாக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டும் பணிக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அப்போது விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்பையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயில்வோருக்கு சாம்பியன்ஸ் கிட் உதவி பொருட்கள் தொகுப்பையும் அவர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; "தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தமிழகத்தில் உருவாக்குவோம். விளையாட்டு துறையின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவோம். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம்." என்றார்.
முன்னதாக, நேற்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பதை விமர்சித்திருந்தார். அத்துடன், யார் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் என விவாதிக்க தயாரா? என முதல்-அமைச்சரை நோக்கி கேள்வியெழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்றும், நேரடி விவாதத்திற்கு என்னை அழைத்தால் நான் செல்வேன் எனவும் தெரிவித்தார். அத்துடன், திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைக்காமல் வேறு யார் பெயரை வைப்பது எனவும் வினவினார்.