'ஆட்சி மாற்றத்திற்கு பின் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறவில்லை' - எடப்பாடி பழனிசாமி
|ஆட்சி மாற்றத்திற்கு பின் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"சென்னை மாநகரில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. சென்னையில் சுமார் 1,240 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் வடிகால் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகு இன்னும் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றிருந்தால், எவ்வளவு மழை பெய்தாலும் சென்னை மாநகரில் தண்ணீர் தேங்காமல் இருந்திருக்கும். ஆனால் தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கு காரணமாக சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது."
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.