சென்னை பல்லாவரத்தில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர்; மின்சார ரெயில்கள் நிறுத்தம்
|சென்னை பல்லாவரத்தில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
சென்னை,
வங்கக்கடலில் நேற்று உருவான 'பெஞ்சல்' புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் எனவும், இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெஞ்சல் புயலை முன்னிட்டு, சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் பல்லாவரம் பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் புறநகர் மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற ரெயில்கள் பல்லாவரத்திலேயே நிறுத்தப்பட்டு உள்ளன. 2 மணி நேரம் வரை புறநகர் மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், பயணிகள் அவதியடைந்து உள்ளனர். ஒரு சிலர் ரெயிலை விட்டு இறங்கி நடந்து செல்கின்றனர்.