மழை வெள்ள பாதிப்பு: நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கினார் முதல்-அமைச்சர்
|நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்.
விழுப்புரம்,
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே நேற்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (திங்கட்கிழமை) காலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மண்டவாய் புதுக்குப்பம் பகுதியில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படக் காட்சியினை பார்வையிட்டு, விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் முதல்-அமைச்சர் விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பகுதியில் பெஞ்சல் புயலால் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைத்திடும் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விழுப்புரம் கிழக்கு, வி.வி.ஏ. மஹாலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வேட்டி, சேலை, உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.