தஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு
|தமிழகத்தில் கனமழை காரணமாக 13 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்,
கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள உக்கடை, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழக அரசின் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு காரணமாக 13 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பின் தன்மையை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் கண்காணித்து, கணக்கீடு செய்து வருகிறார்கள். அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 7,681 ஹெக்டேர் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. 33 சதவீதம் அளவுக்கு பாதிப்பு இருந்தால், பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.