ரவுடி சீசிங் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு
|ரவுடி சீசிங் ராஜா கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னை,
சென்னையில் 6 கொலை உட்பட 39 வழக்குகளில் தொடர்புடைய ஏ பிளஸ் ரவுடி சீசிங் ராஜா கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி சீசிங் ராஜா ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இல்லை என்றும் அவருக்கும் அந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய உறவினர்களின் வீடுகளில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். வில்லிவாக்கம், சேலையூர், தாம்பரம் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஒரு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்த புகாரில் இந்த சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீசிங் ராஜா ரவுடியாக இருந்தபோது வசூல் செய்த பணம் ஏதேனும் உள்ளதா?, அல்லது கள்ளத் துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா?, சட்டவிரோத பணப்பரிமாற்றம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா? என வருவாய் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.