சென்னையில் 'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டம்; பெண்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
|'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டத்திற்கு பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் 'இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்' திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"பெண்களின் பாதுகாப்பில் தமிழ் நாடு சிறந்து விளங்குகின்றது. அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற தமிழ் நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக 'இளஞ்சிவப்பு ஆட்டோக்களை' தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாக சென்னை மாநகரில் பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன.
பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும். அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
இது தொடர்பாக, சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்க சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர்கள் (வடக்கு மற்றும் தெற்கு). 8ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 600001 என்ற முகவரிக்கு 23.11.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கடந்த 22.10.2024 அன்று செய்தி வெளியிடப்பட்டது. தற்போது, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் கால அளவு 10.12.2024 வரையில் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தில் தகுதி பெற 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது, அந்த தகுதி நீக்கப்பட்டு, கீழ்க்கண்ட தேவையான தகுதிகள் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
2. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
3. 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
4. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
5 சென்னையில் குடியிருக்க வேண்டும்.
இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ் நாடு அரசு சிஎன்ஜி/ஹைபிரிட் ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும்.
எனவே, சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை 600 001, சிங்காரவேலர் மாளிகை, 8ஆவது தளத்தில் செயல்படும் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு 10.12.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.