< Back
மாநில செய்திகள்
புதுச்சேரி மாநில நிர்வாகி மறைவு: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல்
மாநில செய்திகள்

புதுச்சேரி மாநில நிர்வாகி மறைவு: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல்

தினத்தந்தி
|
22 Oct 2024 10:57 AM IST

புதுச்சேரி மாநில நிர்வாகி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு வெற்றிக் கொள்கை திருவிழா என்று பிரகடனம் செய்து, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குழுக்களை அமைத்து கட்சி தலைமை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மாநாட்டுக்கான மேடையானது கிழக்கு திசை நோக்கி அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பார்வையாளர்களின் வசதிக்காக உணவுக்கூடங்கள், குடிநீர் வசதிகள், தற்காலிக கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் 80 சதவீதத்திற்கும் மேல் நிறைவு பெற்றுவிட்டது. மாநாட்டுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், அங்கு இரவு பகலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் கட்சி மாநாட்டு பணியில் ஈடுபட்டு வீடு திரும்பிய புதுச்சேரி தமிழக வெற்றிக்கழக மாநிலச் செயலர் சரவணன் (47) நேற்று திடீரென உயிரிழந்தார்.

புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்தவர் சரவணன் (47). இவருக்கு மனைவி தேவி மற்றும் மகன் உள்ளனர். கல்லூரியில் படிக்கும் காலம் தொட்டே நடிகர் விஜயின் தீவிர ரசிகரான சரவணன் ரசிகர் மன்ற முன்னோடியாக இருந்து வந்துள்ளார். தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில், அதன் புதுவை மாநிலச் செயலாளராகவும், அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு மிக நெருக்கமானவராக திகழ்ந்தார்.

வரும் 27-ம் தேதி அன்று விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் மாநாட்டு வேலைகளில் அவர் தீவிர கவனம் செலுத்தி வந்தார். இந்த சூழலில் புதுச்சேரி திரும்பிய அவருக்கு நேற்று மாலை வீட்டில் இருந்த போது லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், குடும்பத்தினர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கட்சி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி மாநில நிர்வாகி மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி சரவணன், திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்