< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்.. - துணை முதல்-அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்
மாநில செய்திகள்

"பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்.." - துணை முதல்-அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
15 Oct 2024 9:47 PM IST

மின் இணைப்பு துண்டிப்பு குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ரிப்பன் மாளிகையில் அதிகாரிகளுடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். சென்னையில் மழையால் விழுந்த அனைத்து மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேம்பாலங்களில் கார் நிறுத்துவோருக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

300 இடங்களில் நிவாரண மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 14 மையங்களில் 600 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகள் முறையாக தரப்படுகிறது. மழையால் பாதிக்கப்பட்டோருக்கு இரவு உணவு தயாராக உள்ளது.

10 மின் மாற்றிகளில் மட்டுமே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிற இடங்களில் மின்சார விநியோகம் சீராக உள்ளது. 103 படகுகள் தயார்நிலையில் உள்ளன. 100 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 8 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் பணிகளை மேற்கொள்ள சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.

பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மீட்பு, நிவாரணப் பணிகளை மக்கள் பிரதிநிதிகள் மூலம் மேற்கொண்டு வருகின்றோம். ஏரிகளில் ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்