< Back
மாநில செய்திகள்
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ம் தேதி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ம் தேதி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

தினத்தந்தி
|
11 Dec 2024 11:11 AM IST

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வருகிற 24-ம் தேதி போராட்டம் நடைபெறும் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து டிசம்பர் 24-ம் நாளுடன் 1,000 நாட்கள் ஆகின்றன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அறிவித்து பெருந்துரோகம் இழைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகம் என்றால் அது வன்னியர்கள்தான். அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தான் சமூகநீதியின் அடிப்படை ஆகும். ஆனால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று இல்லாத காரணங்களைக் கூறி ஓர் அரசு மறுக்கிறது என்றால், அந்த அரசை நடத்துபவர்கள் வன்னிய மக்கள் மீது எந்த அளவுக்கு வன்மம் கொண்டிருப்பர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது; மக்களும் இதை புரிந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி வன்னிய மக்கள் தொடங்கிய போராட்டம் தான் 21 இன்னுயிர்களை இழந்தாலும் கூட, 20 சதவீத இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்தது. இப்போது பெரியாரின் நினைவு நாளில் (24-ம் தேதி) தொடங்கும் அடுத்தக்கட்ட போராட்டமும் வெற்றியில் தான் முடியும்; வன்னியர் சமூகத்திற்கு சமூகநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும், உறுதியும் எனக்கு அதிகமாகவே இருக்கின்றன.

காஞ்சிபுரம் நகரில் நடைபெறும் போராட்டத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று நடத்துவார். மற்ற இடங்களில் நடைபெறும் இந்த போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையேற்று நடத்துவர். தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக நடைபெறும் இந்தப் போராட்டங்களில் அனைத்த் தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்