< Back
மாநில செய்திகள்
தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தினத்தந்தி
|
24 Dec 2024 2:15 PM IST

தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் 31-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான, கடந்த 43 மாதகால திமுக ஆட்சியில் மக்களுக்குப் பயன்தரும் திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல், அரசு நிதிகள் சுயநலத்தோடு பல்வேறு வகைகளில் வீணடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல், மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமலும், பல்வேறு வரிச் சுமைகளை மக்கள் மீது சுமத்தியும், சர்வாதிகாரப் போக்கோடு இந்த அரசு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

அந்த வகையில், திருச்சி மாநகரின் மையப் பகுதியில் உள்ள மாரீஸ் பாலத்தை அகற்றுவதற்காக, கடந்த மார்ச் மாதம் முதல் அப்பாலத்தின் மீதான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இன்றுவரை அந்தப் பாலம் அகற்றப்படாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல், திருச்சி ஜங்ஷன் அருகில் அமைந்துள்ள மற்றொரு பாலமும் அகற்றப்பட்டுவிட்டது.

மேலும், தென்னூர் மேம்பாலத்தையும் சீரமைப்பதற்காக மூடப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. இவ்வாறு, மக்கள் பயன்பாட்டில் உள்ள முக்கியமான பாலங்கள் மூடப்பட்டும், ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுவதாலும், ஏற்கெனவே கடும் வாகனப் போக்குவரத்து நெரிசலால் மேலும் இப்பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள் என்று வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அனைவரும் 3 முதல் 5 கிலோ மீட்டர் வரை சுற்றிச் செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

திருச்சி மாநகராட்சி மக்களை பாதித்து வரும் முக்கிய பிரச்சனைகள்:

* அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடைகள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால், மழைக் காலங்களில் பொதுமக்கள் நிழற்குடைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

* மாநகராட்சிக்கு செலுத்தப்படும் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி போன்ற வரிகளை தாமதமாகச் செலுத்துபவர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதத்திற்கு, மாதம் 1 சதவீதம் என்ற முறையில் வட்டி வசூலிக்கப்படுகிறது. மற்றும் தொழில் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

* வரலாறு காணாத வகையில் குப்பை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

* வாடகைக் கட்டடங்களில் இயங்கும் வணிக நிறுவனங்கள் செலுத்தும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு: தவறும்பட்சத்தில் வட்டி வசூலிப்பது; ஆண்டுக்கு 6 சதவீதம் தானாகவே (Automatic Increase) உயரும் வகையில் கந்து வட்டி, மீட்டர் வட்டி போன்று கடுமையாக வரி உயர்த்தப்படுகிறது.

* ஒரே வளாகத்தில் இருக்கும் பல வீடுகளுக்கு, ஒரு பாதாள சாக்கடை இணைப்பு மட்டுமே கொடுத்துவிட்டு, தனித் தனியாக டெபாசிட் மற்றும் வரி விதிக்கப்படுதல்.

* சமீபத்தில் பெய்த கனமழையால், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள காலி இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதன் காரணமாக சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதோடு, டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

* காஜாமலை காலனியில் உள்ள சமுதாயக் கூடம் முறையாக பராமரிக்கப்படாமல் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இவ்வாறாக, அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கின்ற வகையில் வரிகளை கடுமையாக உயர்த்தி உள்ள மக்கள் விரோத திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்டத்தின் சார்பில், 31.12.2024 செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில், சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ., தலைமையிலும்; திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக செயலாளர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி மாமன்ற முன்னாள் வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நிர்வாகத் திறனற்ற திமுக அரசையும்; திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்