< Back
மாநில செய்திகள்
அனல்மின் நிலைய விரிவாக்கத்தினை முன்மொழிவது மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கை - சீமான்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

அனல்மின் நிலைய விரிவாக்கத்தினை முன்மொழிவது மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கை - சீமான்

தினத்தந்தி
|
16 Nov 2024 12:23 PM IST

அனல்மின் நிலைய விரிவாக்கம் மீள முடியா சீரழிவு நிலைக்கு இட்டுச்செல்லும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO), திருவொற்றியூர் வட்டத்தில், எர்ணாவூர் கிராமத்திற்கு அருகில் தற்போதுள்ள வளாகத்திற்குள் 1x660 மெகாவாட் நிலக்கரி அடிப்படையிலான எண்ணூர் அனல்மின் நிலையம் (ETPS) விரிவாக்கத் திட்டத்தை அமைக்க முன்மொழிந்துள்ளது. பல்வேறு சூழலியல் சிக்கல்களுக்கு இடையே மீண்டும் ஒரு அனல்மின் நிலைய விரிவாக்கம் மீள முடியா சீரழிவு நிலைக்கு இட்டுச்செல்லும். சாம்பல் கழிவுகளால் மக்கள் குடியிருப்புகளையும், நீர் நிலைகளையும் ஒரு புறம் சீரழிப்பதோடு காற்று மாசின் காரணத்தினால் வாழ்வதற்குத் தகுதியற்றப் பகுதியாக வடசென்னையை அங்கு இருக்கக்கூடிய அனல் மின் நிலையங்கள் மாற்றி வருகின்றன.

ஆண்டின் பெரும்பான்மை நாட்களில் காற்று மாசு விதிகள் குறிப்பிட்டுள்ள வரையறையைத் தாண்டி மாசு வெளியிடக் காரணமாக இருக்கக்கூடிய அனல் மின் நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் குரல் வலுத்து வரும் நிலையில் எவ்வித சூழலியல் மீட்பு குறித்தும் நடவடிக்கை எடுக்காமல் நிலையற்றப் பகுதியில் மேலும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத்தினை முன்மொழிவது மக்கள் நலனுக்கும், சூழலியல் நலனுக்கும் எதிரான நடவடிக்கையாகும்.

நிலக்கரியைக் கொண்டு இயங்கக்கூடிய மின் உற்பத்தி முறைகளை உலக நாடுகள் கைவிட்டு வரும் நிலையில், இது தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தங்களில் இந்தியா கொடுத்துள்ள வாக்குறுதியினையும் பொருட்டாகக் கொள்ளாமல் தொடர்ந்து அனல் மின் நிலையங்களை அமைப்பது பன்னாட்டு விதிமீறலாகும். சென்ற 2022-ம் ஆண்டு இத்திட்டம் குறித்தப் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று கூறியிருந்த நிலையில் நான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் பெருந்திரளாகக் கலந்து கொள்வதாக அறிவித்தோம். பின்னர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இடையில் இத்திட்டம் குறித்த எவ்வித செய்திகளும் வராமல் இருந்தன. தற்போது மீண்டும் இத்திட்டத்திற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் இத்திட்டம் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுவதும், மீண்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதும் மாறி மாறி அரங்கேறுவது, அடிப்படையில் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தனிநபர் நோக்கங்களோடு இத்திட்டம் முன்மொழியப் படுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

இதுவரை ஏற்படுத்திய சூழலியல் சீரழிவுகளுக்குப் போதிய தீர்வின்றித் தமிழ்நாடு அரசு இருக்கும் நிலையில் மேலும் சூழலியல் சீரழிவுக்கு வித்திடக்கூடிய இது போன்ற திட்டங்களுக்கு ஒரு போதும் மக்கள் அனுமதி வழங்கப்போவதில்லை. ஏற்கனவே பரந்தூர், கன்னியாகுமரி என்று பல்வேறு பகுதிகளில் மக்களின் எதிர்ப்பின் நடுவே திட்டங்களை முன்மொழிந்து வரும் நிலையில், மேலும் மக்கள் எதிர்ப்பிற்கு உள்ளாகாமல் இத்திட்டத்திற்கான முன்மொழிவினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகின்றேன். மேலும், பொது மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும் அறிவிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்