பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் உரிய பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
|பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் காவல் துறை மூலம் உரிய பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
அரசு மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் என்ற வரிசையில் தற்போது பதிவுத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் சார் பதிவாளர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பொதுவாக, மாவட்ட தலைநகரங்களில் உள்ள பல அரசு அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் இயங்கும் என்றாலும், பிற இடங்களில் மக்கள் அடிக்கடி வந்து செல்லக்கூடிய அலுவலகங்களான வருவாய்த் துறை, பொதுப் பணித்துறை, பத்திர பதிவுத்துறை ஆகியவை தனித்தனி கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன.
பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லக்கூடிய அரசுத் துறைகளில் முக்கியமான ஒன்றாக விளங்குவது பத்திர பதிவுத்துறை. இது மட்டுமல்லாமல், அரசுக்கு வருவாய் ஈட்டித் தருகிற துறைகளில் முக்கியமானதாக விளங்குவதும் பத்திர பதிவுத்துறை. இப்படி மக்கள் அடிக்கடி வந்து செல்லும் அலுவலகங்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்படுவது அரசின் தலையாய கடமை. இந்தக் கடமையை சரிவர செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது.
கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட ஆவணத்தை சார் பதிவாளர் பதிவு செய்ய மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர், தானும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு சார் பதிவாளர் மீதும் ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதே போன்று, மதுரை மாவட்டம், பேரையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பதிய மறுத்த சார் பதிவாளர் தாக்கப்பட்டு அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது.
இது போன்ற கொலை முயற்சிகள் நடப்பதற்குக் காரணம் காவல் துறை காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மிகுந்த மெத்தனப் போக்கை திமு.க அரசு கடைபிடிப்பதுதான். பாதுகாப்பிற்கு ஆளில்லாத சூழ்நிலை தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் குட்டு வைக்கும் அளவுக்கு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது மட்டுமல்லாமல், பதிவுத் துறையில் பதிவு அலுவலர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த மேடைகள், தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அகற்றப்பட்டுவிட்டதும் பாதுகாப்பின்மைக்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இது பதிவுத் துறை அலுவலர்களிடையே பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பதிவுத் துறை அலுவலர்கள் தங்கள் பாதுகாப்பினை வலியுறுத்தி, நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். முதல்-அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்களில் காவல் துறை மூலம் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.