கொடைக்கானல் மலைப்பாதைகளில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்கள் செல்ல தடை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
|கொடைக்கானல் மலைப்பாதைகளில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்கள் செல்ல தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்,
பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கொடைக்கானல் மலைப்பாதைகளில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்கள் செல்ல தடை விதித்து திண்டுக்கல், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"திண்டுக்கல், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாநில போக்குவரத்து அதிகாரியின் இசைவுடன் பொதுநலன் கருதியும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள்) திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்லத் தடைவிதித்து உத்தரவிடப்படுகிறது. இந்த அறிவிப்பு 18.11.2024 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.