< Back
மாநில செய்திகள்
புயல், கனமழையை எதிர்கொள்ள தயார் - சென்னை மாநகராட்சி
மாநில செய்திகள்

புயல், கனமழையை எதிர்கொள்ள தயார் - சென்னை மாநகராட்சி

தினத்தந்தி
|
29 Nov 2024 11:25 PM IST

புயல், கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறியது. இந்த புயலுக்கு பெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இது நாளை பிற்பகலில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை உட்பட 24 மாவட்டங்களுக்கு நாளை கனமழை முதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், புயல், கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னையில் புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் 22,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 120 சமையல் கூடங்களும், போதிய மளிகை மற்றும் காய்கறிகள் தயாராக உள்ளன. 103 படகுகள் தேவையான இடங்களில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.

100 குதிரைத்திறன் கொண்ட 134 ராட்சத மோட்டார்கள் உட்பட 1,686 மோட்டார்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. 466 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட மோட்டார்களும் தயாராக உள்ளன. 262 மர அறுவை இயந்திரங்கள், 9 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்