கட்சியில் உழைப்பவர்களுக்கு மிக விரைவில் பதவிகள் - புஸ்ஸி ஆனந்த்
|நம் தலைவரை முதல்-அமைச்சர் இருக்கையில் அமர வைப்பதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு புஸ்சி ஆனந்த் அறிவுறுத்தினார்.
சென்னை,
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குகிறது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்கு விஜய் திட்டமிட்டுள்ளார். மேலும் கட்சி வளர்ச்சி பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவரது அறிவுறுத்தலின் பேரில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கி பேசியதாவது:-
மற்ற கட்சிகளில் கூட்டம் என்றால் 200, 300 பேர் இருப்பார்கள். நமது கட்சியில்தான் 2 ஆயிரம், 3 ஆயிரம் கூடி இருக்கிறார்கள். நான் இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக கட்சி அறையில் இருந்தேன். அப்போது எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்? என்று கேட்டேன். 30, 40 பேர் மட்டும் வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். இன்னும் அரை மணி நேரத்தில் பாருங்கள் என்று சொன்னேன். அதை போன்று கூட்டம் திரண்டுள்ளது. இதுதான் தளபதி (விஜய்) மீது வைத்திருக்கிற பாசம், அன்பு.
தளபதியின் அறிவுறுத்தலின்படி கட்சியில் உழைப்பவர்களுக்கு மிக விரைவில் பதவிகள் வழங்கப்படும். யாரெல்லாம் கட்சிக்கு உழைத்தார்களோ அவர்களுக்கு தேடி போய் பதவி கொடுப்பதுதான் தமிழக வெற்றி கழகம். கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரையில் பதவிகள் வழங்கப்பட இருக்கிறது. நம் தலைவரை முதல்-அமைச்சர் இருக்கையில் அமர வைப்பதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.